Pages

Sunday, October 28, 2012

அரியும் சிவனும்!



-->
மடவார்விளாகம்
   கோதை பிறந்த ஊர்,கோவிந்தன் வாழுமூர் நான் மறைகள் ஓதும் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர்தான் அதியற்புதமான சிவாலாயம் ஒன்றுள்ளது.




-->
விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சைவத் திருத்தலமாக திகழ்வது, மடவார்விளாகம்அருள்மிகுவைத்தியநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூரி
லிருந்து  தென்காசி செல்லும் பாதையில் , ஊரின் எல்லையில் அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம்.



          வன்னிமரங்கள் அடர்ந்த சோலையில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியவரே வைத்தியநாதர். தேரோடும் வீதியும், திருக்குளமும் கொண்ட மிகப்பெரிய கோயில், ‘செண்பக் குழலாள்’ என்ற திருநாமம், செண்பகக் குழலி ஆகி, தற்போது ‘சிவகாமி’ என்றும் அன்னை அழைக்கப் படுகிறாள்.
          ஒன்பது கலசங்களோடு கூடிய 134 அடி உயர, ஒன்பது நிலை ராஜகோபுரம் நம்மை வியக்க வைக்கிறது. கோயிலின் வாசலிலேயே இரண்டு திருக்குளங்கள்-கோயிலின் எதிரில் ஒன்றும், வடகிழக்கில் ஒன்றுமாக.


          வெளிப்பிராகாரம், உள்பிராகாரம் என இரண்டு பெரிய பிராகாரங்களோடு, மகா மண்டபம், மணிமண்டபம், நாடகசாலை அர்த்தமண்டபம் இப்படி அத்தனை அம்சங்களும் நிறைந்த அழகிய திருக்கோயில்.



          மதுரையை ஆண்டுவந்த திருமலை நாயக்கரின் கடும் வயிற்றுவலியைப் போக்கியவர் இந்த வைத்தியநாதர். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் உள்ளது போன்ற கல்யாண மண்டபத்தை அமைத்தவர் திருமலை நாயக்க மன்னர்.
          புனல்வேலி எனும் சிற்றூர், வில்லிபுத்தூரின் எல்லையில் உள்ளது. சிவனடியார் ஒருவரின் மனைவிக்குப் பேறுகாலம் நெருங்கியது. தாயார் துணைக்கு வருவாள் எனக் காத்திருந்தாள் அவள். அவளது தாய்வர ஏனோ தாமதமாக, வைத்தியநாதப் பெருமானே அவளுக்குத் தாயாக நின்று பிரசவமும் பார்த்து அருளினாராம் அருகில் உள்ள நதியும்’கர்ப்ப நதி’ என்று பெயர் பெற்றது.
          வில்லூர் எனும் வனப்பகுதியில் வேடர்கள் பலர் இருந்தனர். அவர்களது தலைவன் தெக்கன், நற்குணம் படைத்தவன். வினைவசத்தால் பார்வை இழந்து பரிதவித்தான். மலைத்தேன் வாங்க மலைக்கு வந்த சிவனடியார் மூலம் வைத்தியநாதரின் பெருமை அறிந்தான்.



        சிவராத்திரி இரவு முழுவதும் உறங்காது,வைத்தியநாதர் சந்நதியே சதியென்று கிடந்தான் தெக்கன். மூன்றாம் ஜாமத்தில் நந்திதேவரே அவனை பிரம்பால் அடித்து, ‘ஈசனை கண்ணால் தரிசித்திடுக!’ என்று கூறியது போல் உணர்ந்ததோடு பார்வையும் பெற்றான். 



          கொடிமரத்தின் முன்னே பதிக்கப் பட்டுள்ள எட்டு அடி நீளமும், மூன்றடி அகலமும் கொண்ட ‘ஆமைக்கல்’ நம் கவனத்தை ஈர்க்கிறது. ஐம்புலங்களையும் அந்த கரணங்களையும், ஆமை தன் உடலை, ஓட்டினுள்ளே ஒடுக்குதல் போல், நாமும் மனதை ஒடுக்கி, ஒரே நினையுடன் வழிபாடு செய்திட வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமைகிறது.
          கம்பீரமாக கொடிமரத்தருகே அமர்ந்திருக்கும் நந்திதேவருக்கு தினமும் நடை பெறும் ‘மிருத்யுஞ்சய ஜபம்’ மடவார் விளாகத்துச் சிறப்பு  வழிபாடு ஆகும். மகா மண்டபத்தில் கங்காளநாதர், அம்பலவாணர் அரங்கம் ஆகியவை காண்பதற்கு அரியவை.
கண்ணொளி தரும் வைத்திய நாதர்



          கருவறையில் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார் வைத்தியநாதர். நாகாபரணம் சாத்தி, மலர் மாலைகளால் அலங்கரித்து, பட்டாடை சூட்டி, நாளெல்லாம் கண்டு களிக்க வேண்டிய அற்புத மூர்த்தம், தெக்கனுக்கு கண்ணோளி தந்தருளிய தீன தயாளன் அல்லவா!
          வைத்தியநாதரின் வலப்புறம் தனிச்சந்நதி கொண்டுள்ளாள் சிவகாமியம்மை, நின்ற கோலம் மதுரை, நெல்லையை போல, ஈசனின் வலதுபுறம் அன்னையின் சந்நதி அமைந்ததும் தனிச்சிறப்பு.
          வெள்ளிக்கிழமைகளில் அன்னை, விரதமிருந்து வைத்தியநாதரை பூஜை செய்வதாக ஐதிகம். ‘குங்குமார்சசனை’ அன்று தனிச்சிறப்பு பெற்றுள்ளது. கொடி மரமண்டபத்தில் ஸ்ரீசக்ரமும் பதிக்கப்பட்டுள்ளது.
          பத்தடி உயரம் கொண்ட ஒரே கல்லினாலான ஆடவல்லானின் திரூருவச்சிலை, தீராத நோய்களை தீர்த்திடும் ஜுரஹரதேவர்,காலபைரவர்,ஆகியன, மடவார் வளாகத்தின் பெருமைமிக்க சன்னதிகள். தல விருட்சமான வன்னி மரத்தருகில் சனிபகவான் தனிச்சன்னதியும் அமைந்துள்ளது.



சூரிய பூஜை.
புரட்டாசி, பங்க்குனி மாதங்களில், மூலவர் வைத்தியனாதர் மீது, சூரியன் தன்  ஒளிக் கதிர்களால் பூஜை செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
**********************************************************************************

 

3 comments:

  1. பலமுறை சென்றதுண்டு...

    அழகிய படங்களும், கோவிலின் சிறப்புகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ஆமைக்கல் விளக்கம் மிகவும் அருமை...

    ReplyDelete
  2. கண்ணொளி தரும் வைத்திய நாதர் பற்றி
    கருத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. ”அரியும் சிவனும் ஒண்ணு
    அறியாதவா வாயிலே மண்ணு” ன்னு சொல்லுவா.


    படங்களும் விளக்கங்களும் அழகோ அழகு.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete