முன்பெல்லாம்,ஒவ்வொரு
இல்லத்திலும் தவறாமல் இருக்கும் பொம்மைகளில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையும்
ஒன்று. பழமை வாய்ந்த ஒரு பண்பாட்டின் அடையாளமான இந்த பொம்மை ஒரு வரலாற்றுச்
சான்றாகும். இன்றும் அகழ்வாராய்ச்சிகளில் தமிழகத்தில் பழமையான சுடுமண் பொம்மைகள்
கண்டெடுக்கப்படுகிறது.
“வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும்
அயராமல் உடன் வேகமாக எழவேண்டும்” என்ற உயரிய தத்துவம் இந்த தலையாட்டி பொம்மை
உணர்த்துகிறது.
தலையாட்டி பொம்மையில் இரண்டு
பாகங்கள் உள்ளன. அடிப்பாகம் குண்டு என்றும் மேல் பாகம் உடல் என்றும் கூறுவர்.
அடிப்பாகம் கனமாக இருப்பதற்காக களிமண்ணாலும், மேல் பாகம் லேசாக இருக்க காகிதக்
கூழாலும் செய்கிறார்கள். இதனால் தான் பொம்மை சாய்ந்தால் உடன் நிமிர்ந்து
கொள்கிறது.
அடிப்பாகம் தான் பொம்மையின்
முக்கியமானது. இது சரியான அளவில் இல்லை என்றால் பொம்மை சாய்ந்தால் நிமிராது. வயல்
படுகை மாண்ணை சுத்தம் செய்து, பிசைந்து, நல்ல பதத்தில் நிழலில் காற்றாட உலர்த்தி
அச்சில் வைத்து கொட்டாங்குச்சி போல் (தேங்காய் கூடு) செய்கிறார்கள்.
உடல் பாகம் செய்யவும் மிகுந்த பொறுமை
தேவை. பேப்பர் கூழுடன், குளத்தில் உள்ள பொருக்கு போன்ற மண்ணை கலந்து தயாரிக்க
வேண்டும். சாக்பீஸ் மாவு கொண்டும் தற்போது தயாரிப்பர். குளத்தின் வறண்ட பகுதியில் உள்ளதை பொருக்கு மண்
என்பர். அதனை ஊற வைத்து, கரைத்து அத்துடன் காகித கூழ் கலந்து சப்பாத்தி மாவு
பதத்தில் வந்த பின், அதனை உருட்டி, தேய்த்து முக்கோண வடிவில் செய்வர்.
முகத்திற்கான அச்சில் இதனை வைத்து
அழுத்தி முகத்தை தயாரிப்பர். இதை உலரவைத்து அடிப்பாகத்துடன் இணைப்பர். காகிதத்தை
மைதாப் பசையினைக் கொண்டு ஒட்டி வண்ணம் தீட்டினால் தலையாட்டி பொம்மை ரெடி. *குழந்தை பொம்மையை வாயில் வைத்தாலும்
பாதிக்காமல் இருக்க, வண்ணத்திற்கு அவுரிவேர், கடுக்காய் போன்ற இயற்கை வண்ணத்தையே
பயன்படுத்துவார்கள்.
தலையாட்டி பொம்மையைப் போலவே
சிறப்பானது நடனமாது பொம்மை. பொம்மையின் கால், பாவாடை,
உடம்பு, தலை, கைகள் என ஐந்து பகுதிகளாக தனித்தனியாக செய்து
இணைக்கப்பட்டிருக்கும் இந்த நடனமாது சிறிய கம்பிகளின் ஆதாரத்தில் தொங்கியபடி நாம்
தொடுவதற்கு ஏற்றார்போல் நெளிந்து வளைந்து நடமாடுவது கண் கொள்ளாக் காட்சியாகும்.
அயல் பாட்டு சீன பொம்மைகளும்,
எலெக்ட்ரானிக் வகைகளும், கணணியில் ஆடும் பலவித விளையாட்டுகளும் நம் குழந்தைகளின்
பராம்பரிய விளையாட்டுக்கள் பலவற்றை அபகரித்து விட்டன.
கண்ணுக்கும் கைகளுக்கும்
பயிற்சிதரும் ஐந்தாம் கல், சோழி ஆட்டம், திட்டமிட்டு செயல் படுத்த பல்லாங்குழி,
கயிறாட்டம் ,ஒற்றுமையை போதிக்கும் கண்ணாம் மூச்சி ஆட்டம், பாண்டி ஆட்டம் போன்ற பல
விளையாட்டுகள் வழக்கொழிந்து விட்டது.
‘விழுந்தாலும் மனம் தளராமல் எழுந்து
நில்’ என்ற போதனையைத் தந்த தலையாட்டி பொம்மையும், நடனமாதுவும் நம் கண்ணில்
இருந்து மெல்ல மெல்ல மறைந்து வந்தாலும், இன்றைக்கும் இதனை நினைவு படுத்தும் வண்ணம்
தஞ்சையில் ஒரு சில கடைகளில் இது காணக் கிடைக்கிறது.
சைவ
ஆகம சாஸ்திரங்களில் லிங்கவழிபாடு முக்கியமானது. ஆண் பெண் தத்துவங்களை சூட்சுமமாக
விளங்கச் செய்வது லிங்கம். முப்பத்திரண்டு வகையான பொருட்களால் லிங்கங்கள்
உருவாக்கப்ப்டுகின்றன.
ஆனால் சுயம்புவாக கிடைக்கக் கூடியது
ஸ்படிக லிங்கம். ஸ்படிகம் சிவன் நெற்றியில் உள்ள சந்திரனில் இருந்து விழுந்தது
என்கிறது புராணம்.
ஸ்படிகம் தூய்மையானது. குளிர்ந்த தன்மையுடையது.
இது இமயமலையின் அடி ஆழத்திலும், விந்திய மலையிலும் கிடைக்கும்.
தமிழகக் கோயில்களில் சிலவற்றில்
ஸ்படிகலிங்கத்தினை தரிசிக்கலாம்.
சிதம்பரத்தில் இது சந்திரமெளலீஸ்வரராக
பூஜிக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி கோயிலில் ஸ்படிக
லிங்கம் உள்ளது. காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும்,ராமேஸ்வரம் கோயிலிலும் [ராமர்
பூஜித்தது] திருவெண்காடு மற்றும் சங்கரன் கோவிலிலும் இது உள்ளது. மேற்கூறிய ஸ்தலங்களுக்கு
செல்லும் போது மறக்காமல் இதை தரிசிக்கலாம்.
கெடுவான் கேடு நினைப்பான் என்பது
முதுமொழி. வானத்து தேவர்கள் அவ்வப்போது “ததாஸ்து” [அப்படியே ஆகட்டும்] என
ஆசிர்வதிப்பதால் நல்லதே நினைக்கவேண்டும்,
நல்லதே பேசவேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
அதேபோன்று ஸ்படிக லிங்கத்தின் சிறப்பு, இது
நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. இந்த நேர்மறை அதிர்வுகள் நவக்கிரகங்களின்
கெட்ட பலனை அழிக்கும் தன்மையுடையது. ஸ்படிகம் நம்மனதை அடுத்தது
காட்டும் பளிங்கு போல்
அப்படியே
பிரதிபலிக்கும் தன்மை உடையது. ஆதனால் இதன் முன்னால் தரிசனம் செய்யும் போது
தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம்.
மதுரைக்கு
தென்கிழக்கில் உள்ளது தூத்துக்குடி மாவட்டம். இங்கு கோவில்பட்டி சங்கரன் கோவில்
பாதையில் வருவது கழுகு மலை என்னும் சிற்றூர். ஊர் என்னவோ சிறு கிராமம்தான். ஆனால்
‘இது ஒரு சர்வதேச சுற்றுலாத்தலமாக’, ஐ.நா. சபையினால் சர்வதேச அளவில் தேர்வு
செய்யப்பட்டுள்ள 38 இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் விஷயம் உள்ளுர்
மக்கள் கூட அறிந்திடாத ஒன்றாகும்.
உள்ளுர் மக்களுக்கு இது ஒரு
முருகன் கோவில், அவ்வளவுதான். ஆனால் மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு அருகில்
உள்ள வெட்டுவான் கோயிலும், மலையில் வரிசையாக செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களும்,
கல்வெட்டுகளும் இந்த கழுகு மலைக்கு சர்வதேச அந்தஸ்தை அளித்துள்ளது.
ராமாயணத்தில் ஜடாயு என்னும் கழுகின்
சகோதரர் இங்கு வணங்கி வழிபட்டதால் கழுகுமலை எனப் பெயர். மயில் மீது
அமர்ந்திருக்கும் முருகன் பெயர் கழுகாசலமூர்த்தி.
சுமார் 300 அடி உயரமுள்ள மலையில்,
30 அடி தூரத்திற்கு மலை குடையப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது முருகன் கருவறை.
முருகனுக்கு இடப்பக்கம் மயில் தோற்றமளிப்பது அபூர்வக்காட்சி.
கோயிலின் அருகில், பளிங்கு போன்ற நீர்
நிறைந்த தெப்பக்குளம். குளத்தின் அடியில் ‘காக்காப்பொன்’ என்ற உலோகத்துகள்களால்
நீர் படு சுத்தமாக உள்ளது.
மலையின் உச்சியில் இருந்து
சிறிதுசிறிதாக செதுக்கி உண்டாக்கப்படும் குடைவரை கோயில்களில், வடக்கில் எல்லோரா
குகைக் கோயிலைப் போல் இங்கும் இருப்பதால் இது தென் இந்தியாவின் எல்லோரா
என்ற சிறப்புச் பெற்றது.
பாண்டிய மன்னன் காலத்தில் ஒரே
கல்லில் சுமார் 8மீட்டர் ஆழத்தில் சதுரமாக செதுக்கப்பட்ட இக்கோயில் கோபுரத்தில்
பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் காட்சி அளிக்கின்றனர்.
சமண
மதம் தழைத்திருந்த கால கட்டத்தில் இங்கு சமணர்களால் செதுக்கப்பட்ட புத்தபிரானின்
திரு உருவங்கள் ஏராளமாக வரிசையாக காட்சி அளிகின்றன.
மலையைக் குடைந்தது; ஒரே கல்லில்
மேலிருந்து கீழாக கோபுரத்தை செதுக்கியது; மலை முழுவதும் சிற்பங்களைச் செதுக்கியது
போன்ற காரணத்தினால் இது சர்வதேச் சுற்றுலா பெருமையைப் பெறுகிறது. இங்கும்
திருவண்ணாமலையில் உள்ளதுபோல் கிரிவலம் பெளர்ணமியில்
நடக்கிறது.
மதுரை பக்கம் சுற்றுலா வந்தால் ஒரு
எட்டு கழுகுமலையையும் தரிசிக்கலாம்.
மதுரை-விருதுநகர்-கழுகுமலை-சங்கரன்
கோயில்-திருநெல்வேலி-குற்றாலம்-ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை என்று வலம் வரலாம்.
கோதை பிறந்த ஊர்,கோவிந்தன்
வாழுமூர் நான் மறைகள் ஓதும் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர்தான் அதியற்புதமான சிவாலாயம்
ஒன்றுள்ளது.
-->
விருதுநகர்
மாவட்டத்திலேயே மிகப் பெரிய சைவத் திருத்தலமாக திகழ்வது,
மடவார்விளாகம்அருள்மிகுவைத்தியநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூரி
லிருந்து தென்காசி செல்லும் பாதையில் , ஊரின் எல்லையில்
அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம்.
வன்னிமரங்கள் அடர்ந்த சோலையில் சுயம்பு
மூர்த்தியாக எழுந்தருளியவரே வைத்தியநாதர். தேரோடும் வீதியும், திருக்குளமும் கொண்ட
மிகப்பெரிய கோயில், ‘செண்பக் குழலாள்’ என்ற திருநாமம், செண்பகக் குழலி ஆகி,
தற்போது ‘சிவகாமி’ என்றும் அன்னை அழைக்கப் படுகிறாள்.
ஒன்பது கலசங்களோடு கூடிய 134 அடி உயர,
ஒன்பது நிலை ராஜகோபுரம் நம்மை வியக்க வைக்கிறது. கோயிலின் வாசலிலேயே இரண்டு
திருக்குளங்கள்-கோயிலின் எதிரில் ஒன்றும், வடகிழக்கில் ஒன்றுமாக.
வெளிப்பிராகாரம், உள்பிராகாரம் என
இரண்டு பெரிய பிராகாரங்களோடு, மகா மண்டபம், மணிமண்டபம், நாடகசாலை அர்த்தமண்டபம்
இப்படி அத்தனை அம்சங்களும் நிறைந்த அழகிய திருக்கோயில்.
மதுரையை ஆண்டுவந்த திருமலை நாயக்கரின்
கடும் வயிற்றுவலியைப் போக்கியவர் இந்த வைத்தியநாதர். மதுரை மீனாட்சி அம்மன்
திருக்கோயிலில் உள்ளது போன்ற கல்யாண மண்டபத்தை அமைத்தவர் திருமலை நாயக்க மன்னர்.
புனல்வேலி எனும் சிற்றூர்,
வில்லிபுத்தூரின் எல்லையில் உள்ளது. சிவனடியார் ஒருவரின் மனைவிக்குப் பேறுகாலம்
நெருங்கியது. தாயார் துணைக்கு வருவாள் எனக் காத்திருந்தாள் அவள். அவளது தாய்வர ஏனோ
தாமதமாக, வைத்தியநாதப் பெருமானே அவளுக்குத் தாயாக நின்று பிரசவமும் பார்த்து
அருளினாராம் அருகில் உள்ள நதியும்’கர்ப்ப நதி’ என்று பெயர் பெற்றது.
வில்லூர் எனும் வனப்பகுதியில் வேடர்கள்
பலர் இருந்தனர். அவர்களது தலைவன் தெக்கன், நற்குணம் படைத்தவன். வினைவசத்தால்
பார்வை இழந்து பரிதவித்தான். மலைத்தேன் வாங்க மலைக்கு வந்த சிவனடியார் மூலம்
வைத்தியநாதரின் பெருமை அறிந்தான்.
சிவராத்திரி இரவு முழுவதும்
உறங்காது,வைத்தியநாதர் சந்நதியே சதியென்று கிடந்தான் தெக்கன். மூன்றாம் ஜாமத்தில்
நந்திதேவரே அவனை பிரம்பால் அடித்து, ‘ஈசனை கண்ணால் தரிசித்திடுக!’ என்று கூறியது
போல் உணர்ந்ததோடு பார்வையும் பெற்றான்.
கொடிமரத்தின் முன்னே பதிக்கப் பட்டுள்ள
எட்டு அடி நீளமும், மூன்றடி அகலமும் கொண்ட ‘ஆமைக்கல்’ நம் கவனத்தை ஈர்க்கிறது.
ஐம்புலங்களையும் அந்த கரணங்களையும், ஆமை தன் உடலை, ஓட்டினுள்ளே ஒடுக்குதல் போல்,
நாமும் மனதை ஒடுக்கி, ஒரே நினையுடன் வழிபாடு செய்திட வேண்டும் என்பதை உணர்த்துவதாக
அமைகிறது.
கம்பீரமாக கொடிமரத்தருகே
அமர்ந்திருக்கும் நந்திதேவருக்கு தினமும் நடை பெறும் ‘மிருத்யுஞ்சய ஜபம்’ மடவார்
விளாகத்துச் சிறப்பு வழிபாடு ஆகும். மகா
மண்டபத்தில் கங்காளநாதர், அம்பலவாணர் அரங்கம் ஆகியவை காண்பதற்கு அரியவை.
கண்ணொளி தரும் வைத்திய நாதர்
கருவறையில் சுயம்புமூர்த்தியாக
எழுந்தருளியுள்ளார் வைத்தியநாதர். நாகாபரணம் சாத்தி, மலர் மாலைகளால் அலங்கரித்து,
பட்டாடை சூட்டி, நாளெல்லாம் கண்டு களிக்க வேண்டிய அற்புத மூர்த்தம், தெக்கனுக்கு
கண்ணோளி தந்தருளிய தீன தயாளன் அல்லவா!
வைத்தியநாதரின் வலப்புறம் தனிச்சந்நதி
கொண்டுள்ளாள் சிவகாமியம்மை, நின்ற கோலம் மதுரை, நெல்லையை போல, ஈசனின் வலதுபுறம்
அன்னையின் சந்நதி அமைந்ததும் தனிச்சிறப்பு.
வெள்ளிக்கிழமைகளில் அன்னை, விரதமிருந்து
வைத்தியநாதரை பூஜை செய்வதாக ஐதிகம். ‘குங்குமார்சசனை’ அன்று தனிச்சிறப்பு
பெற்றுள்ளது. கொடி மரமண்டபத்தில் ஸ்ரீசக்ரமும் பதிக்கப்பட்டுள்ளது.
பத்தடி உயரம் கொண்ட ஒரே கல்லினாலான
ஆடவல்லானின் திரூருவச்சிலை, தீராத நோய்களை தீர்த்திடும்
ஜுரஹரதேவர்,காலபைரவர்,ஆகியன, மடவார் வளாகத்தின் பெருமைமிக்க சன்னதிகள். தல
விருட்சமான வன்னி மரத்தருகில் சனிபகவான் தனிச்சன்னதியும் அமைந்துள்ளது.
சூரிய
பூஜை.
புரட்டாசி,
பங்க்குனி மாதங்களில், மூலவர் வைத்தியனாதர் மீது, சூரியன் தன் ஒளிக் கதிர்களால் பூஜை செய்வது கண்கொள்ளாக்
காட்சியாகும்.
இது எனது 100வது பதிவு. இந்த அளவுக்கு நான்
வருவதற்கு நட்பு வட்டங்களின் இடைவிடாத ஆக்கபூர்வமான கருத்துரைகளே முழுமுதல்
காரணமாகும். அவர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்மான நன்றிகள்.
-->
வாரிசு இல்லாவிட்டாலும் வாழ்க்கை இருக்கு
-->
குழந்தைகள் இல்லாத வீடு, மலர்கள் இல்லாத
தோட்டத்துக்குச் சமம் என்பார்கள். சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அருந்ததி
பிரபாகரனின் வீட்டுக்குள் நுழைந்தால் முதலில் வரவேற்பதே மலர்கள் நிறைந்த அவர்களது
தோட்டம்தான்! சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற
பிரபாகரனுக்கும், அவரது மனைவி அருந்ததிக்கும் திருமணமாகி 32 வருடங்கள்
ஆகின்றனவாம். குழந்தை இல்லை. வாரிசு இல்லாத வருத்தத்தில் வாழ்கையின் மற்ற பக்கங்களை
அனுபவிக்க, நேசிக்கத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தமது அனுபத்தை அடிப்படையாகச்
கொண்டு, குழந்தையில்லாத தம்பதியருக்கான அமைப்பையும் [9840704104, 9445354795]
தொடங்கி, வாரிசு இல்லாதவர்களுக்கு வாழும் கலையைப் பயிற்றுவித்துக்
கொண்டிருக்கிறார்கள்
“தாய்மைதான் ஒரு பெண்ணை முழுமையாக்குது….குழந்தை இல்லாத வாழ்க்கை வெறுமையானதுன்னெல்லாம்
நம்ம சமுதாயத்தால் புரைபோடிப் போன நம்பிக்கைகள் நிறைய இருக்கு. கல்யாணமாகிப்
புகுந்த வீட்ல காலடி வைக்கிற பெண்ணை, அடுத்த மாசத்துலேருந்தே குழந்தைக்காக
காத்திக்கிறதும், எப்படியாவது கிடைச்சிடாதாங்கிற தேடல்ல
சிகிச்சைகளுக்கும்,சாமியாருகளுக்குமா காசைக் கொட்டிக் கொடுத்து, கடைசியிலே ஏமாந்து
நிற்கற கொடுமை இந்த விஞ்ஞான உலகத்துலயும் தொடர்ந்துக் கிட்டுத்தான் இருக்கு.
இன்னொரு பக்கம் குழந்தை இல்லையேங்கிற ஏக்கத்திலே தற்கொலை பண்ணிக்கிறதும்,
கணவருக்கு ரெண்டாவது கல்யாணம் நடக்கறதை சகிச்சுக்கிட்டு, இன்னும் விரக்தி
அதிகமாகிப் புழுங்கறதும் பரவலா நடந்திட்டிருக்கிறதைப் பார்க்கறோம். இதல்லாம்
அனாவசியம்…. சமுதாயமோ, உங்களைச் சுத்தியிருக்கிறவங்களோ நினைக்கிற மாதிரி, குழந்தை
மட்டுமே வாழ்க்கையில்லை. குழந்தை இருந்தா ஓ.கே. இல்லாவிட்டால் டபுள் ஓ.கேன்னு
வாழ்க்கையை ரசிக்கவும் நேசிக்கவும் கத்திக்கொடுக்கற நோக்கத்துல தொடங்கினதுதான்
“குழந்தையில்லாத தம்பதியருக்கான அமைப்பு’.
மாற்றுத்திறனாளிகளுக்கு அமைப்பு இருக்கு…. ஆனா, குழந்தையில்லாதவங்களுக்கு பரஸ்பரம்
உதவி செய்யவோ, மனசைப் பகிர்ந்துக்கவோ அப்படி எந்த அமைப்பும் இல்லை. குழந்தை
இல்லைங்கிறதை வெளில சொல்லிக்கிறதுக்கே ஒரு மனத்தடை இருக்கு. அந்த மாதிரி
தம்பதியருக்குத்தான் இந்த அமைப்பு. இதுவரை ஆயிரக்கணக்கான தம்பதிகளுக்கு கவுன்சலிங்
கொடுத்து, வாழ்கையை முழுசா வாழக் கத்துக் கொடுதிருக்கோம்…”-படபடவெனப் பேசுகிற அருந்ததி, இதே பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்.
“கல்யாணமாகி,
4 வருஷங்கள் குழந்தையை எதிபார்த்துக் காத்திட்டிருந்தோம். குழந்தை பிறக்க
வாய்ப்பில்லைன்னு உறுதியா தெரிஞ்சதும், ரெண்டுபேரும் ஓரே நேரத்துல பேசி, ஒரு
பக்குவத்துக்கு வந்தோம்.’இதுதான் யதார்த்தம்னு தெரிஞ்சிச்சு… இனி
உனக்கு நான்… எனக்கு நீ… இனி எந்தக் காலத்துலயும், நமக்கு பிள்ளைங்க
இல்லையேங்கிறதை நினைச்சு வருத்தப் படக்கூடாது’ ன்னு
எங்களுக்குள்ள ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம். நல்லவேளையா, எங்க ரெண்டு பேரு
குடும்பங்களும் இந்த விஷயத்துல ரொம்ப நாகரிகமா நடந்துகிட்டாங்க. குழந்தையை பத்தி
எங்கக்கிட்ட ஒரு வார்த்தைகூடப் பேசினதில்லை. பொதுவா குழந்தயில்லாத பொம்பிளைங்களை,
கல்யாணம், வளைகாப்பு மாதிரியான விசேஷங்கள்ல ஒதுக்கி வைக்கிறதுதான் நம்ம சமூகத்துல
நடக்குது. ஆனா, எங்க குடும்பம் அதுலயும் விதிவிலக்கு.’அவங்களுக்கு குழந்தை இல்லை… அவங்க ஏதாச்சும் நினைச்சு வருத்தப்பட்டுடக் கூடாது….அவங்களை
முதல்ல கூப்புடுங்க’ன்னு எப்போதும் எனக்குதான் முதல் மரியாதை
நடக்கும்.
ஆனா,எங்க குடும்பம் மாதி மத்தவங்களும் இருக்கறதில்லையே… குழந்தை
இல்லாததை ஏதோ பாவச் செயலா பார்க்கிறவங்கதான் அதிகம். புதுசா அறிமுகமாகிற ரெண்டு
பேருக்குள்ள,ரெண்டாவது கேள்வியே,’குழந்தைங்க இருக்காங்களா?’ என்பதுதான்.
குழந்தை இல்லாதவங்க மனசு அப்போ என்ன பாடுபடும்? இப்படி நிறைய பேரோட வலிகளையும்
வேதனைகளையும் பார்த்திருக்கோம்.
‘கொள்ளி போட வாரிசு வேணுமே’ங்கிறாங்க.
இன்னிக்கு முதியோர் இல்லங்கள இருக்கிறவங்கள்ல, குழந்தை இல்லாதவங்களைவிட, குழந்தைங்க
இருக்கிறவங்கதான் அதிகம். பெத்தவங்களை அனாதையா விடற பிள்ளைங்க, அவங்களோட கடைசி
காலத்துல கொள்ளிபோடக் கூட இப்பல்லாம் வர்றதில்லை. வெளிநாட்ல உட்கார்ந்துக்கிட்டு,
‘நாங்க வரணும்னு வெயிட் பண்ண வேணாம்.எல்லாத்தியும் முடிச்சிடுங்கன்னு சொல்ற காலம்
இது. குழந்தியில்லையேங்கிற துக்கத்து எங்ககிட்ட வர்றவங்களுக்கு இப்படிப் பல
விஷயங்களையும் சொல்லிதான், கவுன்சலிங்கை ஆரம்பிக்கிறோம்.20,25 வயசு வரைக்கும்
தனியாதான் இருக்கோம். குழந்தைங்கிற பந்தம், திடீர்னுதான் நம்ம வாழ்க்கைக்குள்ள
வருது. அதுவும் கூட நிரந்தரமா நம்ம கூடவே இருக்கிறதில்லை. அவங்களுக்கொரு
வாழ்க்கைன்னு வந்ததும், தனித்தனியா பிரிஞ்சுபோயிடறாங்க. இடையில் வந்துட்டு,
இடையிலயே பிரியற ஒரு உறவு இல்லையேன்னு ஏங்கறதுல அர்த்தமே இல்லை.
‘குழந்தை இல்லாட்டி என்ன… தத்து
எடுத்துக்க வேண்டியதுதானே’ன்னு சிலர் கேட்கலாம். கணவன் பக்கத்துலேருந்து எடுக்கிறதா, மனைவி
பக்கத்துலேருந்து எடுக்கிறதாங்கிறது முதல் குழப்பம். ரெண்டுமே வேண்டாம்னு தெரியாத
குழந்தையை எடுத்து வளர்ப்பாங்க. பெத்த பிள்ளைங்களே சொல்பேச்சு கேட்காத இந்தக்
காலத்துல, தத்துப்பிள்ளை கேட்கும்னு என்ன நிச்சயம்? அப்படி ஒரு வேளை எதிர்த்து பேசினாலோ,
வீட்டுக்கு அடங்காமப் போனாலோ,’ யாரோ பெத்த பிள்ளை தானே… அதான் அப்படிப்
போயிருச்சு’ன்னு
அனாவசியப்பேச்சு வரும். அந்த அனுபவம் இன்னும் வேதனையானது. பெற்றால்தான் உறவா என்ன?
எங்களுக்கு ரெண்டு பேர் குடும்பங்கள்லேருந்தும் பதினஞ்சுக்கும் மேலான குழந்தைங்க
இருக்காங்க…” அசத்தலாகச் சொல்கிற அருந்ததி, குழந்தையில்லாத தம்பதியருக்கு சில
ஆலோசனைகளையும் முன் வைக்கிறார்.
40 வயதுக்கு மேல் குழந்தைக்காகக்
காத்திருக்கிறது வேஸ்ட். அந்த உண்மையை ஏத்துக்கிறது கொஞ்சம் சிரமமானதாத்தான்
இருக்கும். ஆனா, முடிவு பண்ணின பிறகு, வாழ்க்கையை எதிர்கொள்றது சிம்பிள்.
யாருக்காக ஓடி ஓடி சம்பாதிக்கிறே… யாருக்கு சேர்த்து வைக்கிறே’ன்னு சமுதாயம்
பேசும். காதுல வாங்கிக்காதீங்க. ஏன்னா, கடைசி காலத்துல உங்க சொந்தக்காரங்களோ,
நண்பர்களோ உதவிக்கு வராத நேரத்துல பணம்தான் உங்களுக்கு ஒரே ரட்சகன்.
கூட்டத்துல
இருக்கிறபோது,உங்கக்கிட்ட குழந்தையைப் பத்தி யாராவது பேச்செடுத்தாங்கன்னா,கண்ணைக்
கசக்க வேண்டாம்.அதைப் பத்தி தொடர்ந்து பேசறதுல உங்களுக்கு விருப்பமில்லைங்கிறதை
தெளிவா, அதே நேரம் கோபப்படாம சொல்லிடுங்க.
‘குழந்தைங்கதான் இல்லையே….
அதான் ஒண்ணும் வாங்கிட்டு வரலை’ன்னு சொல்லிக் கிட்டு வீட்டுக்கு வரும்
விருந்தாளிகள் கிட்டயும், முதல் முறையே நீங்க யாருங்கிறதை தெளிவுப்படுத்திருங்க.
‘முடிஞ்சா, எங்களுக்கு என்ன தேவையோ அதை வாங்கிட்டு வாங்க, இல்லேனா சும்மா வாங்க”என்று சொன்னால் அது
அவர்களை யோசிக்க வைக்கும்.
உங்களுக்கு பிடித்த
வேலையில் கவனம் வையுங்க. அது பொழுதுபோக்காக இருக்கலாம், சமூக சேவையாகவும்
இருக்கலாம், தெரிந்தவர்களின் குழந்தைகளை நேசிப்பதாகவும் இருக்கலாம். நீங்க தரும்
அன்புக்கு ஈடா, அதே அன்பு திரும்பக்கிடைக்கும்.--- அதிதி.